AGALYAAVIN PARISU - 21 அகல்யாவின் பரிசு - 21
அகல்யாவின் பரிசு - 21
துவண்டுத்தான் போயிருந்தாள் அகல்யா. கண்கள் அழுது , சிவந்து வற்றி போயிருந்தது. ஏதேதோ நினைவுகள். என்ன பாவம் செய்தேனோ இப்பிறவியை பெற.முதலில் தாய் பிரிந்தாள். அன்புடனே அந்த குறை தெரியாது அப்பா வளர்த்தார். அவருக்கு கைமாறாக அவமானமும், மனக்கஷ்டமுமே கொடுக்கமுடிந்தது. இன்று எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அன்பான கணவன் , அனாதையாய் விட்டு சென்றது கொடுமை. பெற்ற பிள்ளையும் பிரிந்துவிட்டது. மணவாழ்க்கையும் பங்கு போட்டு விட்டார்கள்.மானமான கற்பும் பறிபோனது. என்ன கொடுமை இது. எதற்க்காக இந்த பிறவி என்று ஆழ யோசித்தபோது ஒரு விஷயம் ஊர்ஜிதமானது அகல்யாவுக்கு. அவள் பிறவி எடுத்தது அவளுக்காக வாழ அல்ல. ஆண்டவனின் கணக்குப்படி அவள் பிறர்காகவே படைக்கப்பட்டிருக்கின்ற ஜன்மம் என்பதே அது. முடிவெடுத்தாள். தென்காசியில் உள்ளோரை பழிவாங்கும் எண்ணமும் தளர்ந்துபோனது.சரி இனி நம் ஆசாபாசங்கள் அனைத்தையும் மறந்து விட்டு பொது வாழ்வே தன் வாழ்வாய் மாற்றிக்கொண்டு இயன்ற வரை இவ்வுலகிற்கு சேவை செய்வோம் என்ற தீர்மானத்துடன் எழுந்தாள்.
இப்போது அவள் முகத்தில் புது உற்சாகம். ஆறுதல் வேண்டி அந்த கிராமத்திற்கு சென்றாள். அங்கே அவளை எல்லோரும் வரவேற்றனர். அவள் தங்கிய குடிசையின் பின்புற வீட்டு பெண் மாசமாகிருந்தாள். அவளுக்கும் தாய் இல்லை. அவள் சிறிது நேரம் அகல்யாவோடு பேச வந்திருந்தாள். தன் துயரங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டு , என் தாய் இல்லாதது இப்போது வலிக்கிறது, அவர்கள் இருந்திருந்தாள் என்னை இப்படி விட்டிருப்பார்களா, நான் ஆசை பட்டதை செய்து கொடுத்து எனக்கு வளைகாப்பு எல்லாம் நடத்தி இருப்பார்கள் அல்லவே என்று புலம்பியபடி வீட்டிற்கு சென்றாள். அகல்யாவிற்கு அந்த வலி சரியாய் புரிந்தது, காரணம் அவளும் அப்படி எத்தனையோ முறை நினைத்ததுண்டு. சரி இனி கர்ப்பிணிப்பெண்களுக்கு தேவையான மருத்துவச்செலவுகளை ஏற்று தனது அறக்கட்டளை மூலம் உதவுவது என்று முடிவு செய்தாள். அதற்கு அச்சாரமாக கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லோரையும் கூட்டி, அந்த பெண்ணிற்கு எல்லோர் முன்னிலையிலும் வளைகாப்பு நடத்தி, அவளுக்கு உடை மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து, அவள் மருத்துவ செலவுகளை அவள் அறக்கட்டளை ஏற்கும் என்றும் அறிவித்தாள். ஒரு அரசு ஆரோக்கிய மையம் ஒன்றை அமைக்க முயற்சி எடுத்தாள்.
சீனு சினந்து காணப்பட்டான். அவனது குழந்தையை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, ராஜலிங்கம் மெல்ல அவன் தோள் தொட்டு, சீனு உன் குழந்தய மறந்திடு. காரணமாத்தான் சொல்றேன். என்னைக்குமே அது இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதுதான் உனக்கு சாதகம். இல்லையென்றால் அகல்யா உன்னை கண்டிப்பாக ஜெயிலுக்கு அனுப்புவது நிஜம். எல்லாம் சாதகமாக முடியும் வரை அந்த குழந்தை வேறு ஒருவரிடம் வளரவேண்டியது விதி. நான் வேறு ஏற்பாடு செய்து விட்டேன், ஆதலால் நீ இன்னொரு குழந்தையை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக குடும்பம் நடந்து. என் பேச்சுக்கு மரியாதை இல்லையென்றால் நான் இனி உங்கள் விஷயத்தில் தலையிடவில்லை என்றார். சீனுவின் தாய் பதறியபடி, ஐயோ அண்ணா நீங்கள் இல்லையென்றால் எங்களுக்கு வேறு யார் துணை, அவன் ஏதோ சின்ன பையன் புரியாமல் பேசுகிறான், நீங்கள் போங்கள் நான் அவனை சரிபடுத்துகிறேன் என்று கூறி அவரை அனுப்பிவிட்டு, சீனுவிடம் இனி அந்த குழந்தயைப்பற்றி பேசினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி சீனுவை முற்றிலும் பணியவைத்தார் அவர் வழிக்கு.
கோகுலநாதன் பவ்யமாக நின்றிருந்தார் ராஜலிங்கத்தின் முன். இவர் அம்பாசமுத்திரத்தில் பெரிய வாணிபர். பாரம்பரியம் மிக்க உணவகம் ஒன்று, 15 கார்கள் கொண்ட டிராவல் ஏஜெண்சி, ஒரு நூற்பாலை என்று பணத்தில் கொழிக்கும் சீமான்.
ராஜலிங்கம் இருமியவாறே, கோகுல் உனக்கு குழந்தை பிறக்காது என்று உனக்கு மட்டுமே தெரியும். உன் மனைவிக்கு தெரியாமல் இருக்க அவளை கொலை செய்ய கூட துணிஞ்சிட்டே, அதனாலே நான் ஒன்று சொல்றேன் அதை செய், நீ கொலைகாரனாக மாட்டாய் என்றார். சரி ஐயா சொல்லுங்கள் என்றார் கோகுலநாதன். என்னிடம் ஒரு குழந்தை இருக்கிறது. நம்ம நாராயணசாமி பேரன். அவன் தற்பொழுது வேறு ஒரு வீட்டில் வளர வேண்டிய சூழல். மிகவும் ரகசியம் காக்க படவேண்டிய விஷயம். அந்த சிசுவை முறைப்படி நீயே தத்து எடுத்து கொள், மருத்துவர் மூலம் உன் மனைவிக்கு குறை உள்ளதெனக் கூறி உங்கள் வீட்டில் எல்லோரையும் சம்மதிக்க வைத்து விடுவோம். இதனால் உன் பிரச்னையும் தீரும், அவர்கள் பிரச்சினையும் தீரும். எக்காரணம் கொண்டும் என்ன காரணம் என்பதை மட்டும் கேட்கக்கூடாது என்றார். கோகுலநாதன் சம்மதிக்க அகல்யாவின் மகன் கண்ணன் என்ற பெயரில் கோகுலநாதனிடம் வளரத்துவங்கினான். இது சீனுவின் தாய்க்கு கூட தெரியாது.
ராஜலிங்கம் கோகுலநாதனுக்கு செய்த இந்த பேருதவியால் அவர்கள் வீட்டில் இன்பம் தழைத்தது. ராஜலிங்கத்தை கட்சியில் சேர்த்து நிறைய பணம் செலவழித்து ராஜலிங்கத்தை மாநில செயலாளர் பதவிக்கு கொண்டு வந்தார் கோகுலநாதன். செஞ்சோற்றுக்கடன்!!!!
வருடங்கள் ஓடியது.. அகல்யாவும் சீனுவும் தொடர்பேயின்றி அவரவர் வாழ்க்கையில் தொலைந்து போனார்கள். அகல்யா தற்பொழு ஓரளவுக்கு செல்வாக்குள்ள பெண்ணாக மாறி இருந்தாள். மந்திரிகள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், அரசு சார்ந்த திட்டங்களின் செயற்குழு உறுப்பினர்கள் என்று பல வட்டங்களில் மக்கள் கண்டு அறியக்கூடிய பிரமுகத்துவம் அடைந்திருந்தாள். கிராமத்தில் ஆரோக்கிய மையம், சுகாதார மையம், சொட்டு நீர் பாசன திட்டம், வங்கிகளின் கடனுதவி, மகளிர் சுயஉதவி குழுக்கள் என்று பல நல்ல சமுதாய சேவையை செய்து நல்ல பெயர் வாங்கியிருந்தாள். அழகும் , வனப்பும் இன்னும் கூடி பார்ப்பதற்கு இன்னும் கவர்ச்சியாகவும், அழகாகவும் தோன்றினாள். ஒரு நாள் திடீரென்று சீனு அனுப்பியதாக கூறி அவர்கள் ஊர் பிரமுகர் ஒருவர் வந்து விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்தார். தற்போதய மனநிலையில் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை. பத்திரத்தை படித்தவள் ஒரு வற்றிய புன்னகையை உதிர்த்தாள். பெண்ணே பெண்ணிற்க்கு எதிரி , ஆம் அந்த பத்திரம் சீனுவின் தாயார் தூண்டுதலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. அகல்யா கூறினாள், " ஐயா என் சொத்துக்களை முறைப்படி விற்று பணமாக்க எனக்கு உதவி செய்தால் மட்டுமே நான் கையெழுத்து போடுவேன், ஆதலால் முதலில் அதை செய்துவிட்டு என்னைஅழைக்கச் சொல்லுங்கள் பிறகு நானும் தென்காசிக்கு வந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தென்காசிக்கே ஒரு கும்பிடு போட்டு விடுகிறேன் என்றாள். செய்தி சீனுவிற்கு எட்டியது. கோடி ருபாய் பெறுமானமுள்ள சொத்தை 50 இலட்சதிற்கு வாங்கிவிட திட்டம் போட்டார் ராஜலிங்கம்.ஆனால், அகல்யா இப்போது படுசமத்து ஆகிவிட்டதால், சொத்து மதிப்பீடு ஒன்றை தனியார் கம்பெனி மூலம் தயாரித்து அதை அனுப்பி 1 கோடிக்கு 90 இலட்சம் வந்தாலும் பரவாயில்லை என்று செய்தி அனுப்பினாள். சீனுவிற்கும், தாயிற்கும் 1 கோடி ருபாய் சொத்து போகப்போகிறதே என்ற கவலை ஏற்பட்டது. ராஜலிங்கம் திட்டம் வகுத்தார். அகல்யாவை தென்காசிக்கு வரவழைத்து, சொத்து பாத்திரங்களில் அவள் கூறிய விலைக்கு வாங்கி, தனது பெயருக்கு மாற்றும் தருவாயில், ஏதாவது சூழ்ச்சி செய்து பணம் தராமல் ஏமாற்றி விடுவது என்று. தான் வகுக்கும் அத்திட்டம் தன் உயிருக்கே உலை வைக்க போகிறது என்பதை அப்போது அவர் உணர்ந்திருக்க வில்லை.
தொடரும் ...........
Comments
Post a Comment