AGALYAAVIN PARISU - 17 அகல்யாவின் பரிசு - 17

அகல்யாவின் பரிசு - 17

                                   வானம் தூறியது. தூறிக்கொண்டே இருந்தது. துவண்டு போன அந்த பெண் ஜென்மத்திற்கு துண்டு துணி கிடைக்காதா, தனது மானத்தை காத்து கொள்ள என்று குமுறியது. தனது வலிமையால் நீரூற்று ஒன்றின் மூலமாக அவளின் ஆடைகளை அவளிடம் சேர்த்தது. அகல்யா தத்தி தத்தி , தட்டு தடுமாறி அவைகளை எடுத்து அணிந்தாள். சீனுவை நோக்கி நடந்தாள். சீனு மயக்கம் தெளிந்து இருந்தான், ஆனால் பாவம் வாயெல்லாம் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.அகல்யா அவனை உசுப்பி எழுப்பிவிட்டாள். அவளும் எழுந்தாள். இருவரும் குடிசையை நோக்கி நடந்தனர்.

                                    மறுநாள் விடிந்தது. அகல்யாவிற்கு மனதும், வாழ்வும் இருண்டது. இழப்பதற்கு இனி என்ன ? உயிர் வரை நினைவால் இனித்தவன், பக்கமிருந்தும், உயிருக்குள் உலை கொதித்தது. இவனுக்கு நாம் இனி தாரமாக முடியுமா. ஏதும் புரியாதவனாய் இருக்கும் இவனிடம் மறைத்து விடலாமா. அது துரோகம் அல்லவா . அவனிடம் உண்மையை கூறி விடலாமா. இவனால் தானே இந்த கொடுமை அரங்கேறியது. போயிராவிட்டால் அவன் உயிர் போயிருக்கும். அதை காக்க போனதால் மானமும் போனது. மானத்தை இழந்து வாழ்வை அடைய வேண்டுமா அல்லது மானம் போகும் முன்பு வாழ்வை முடித்துக்கொள்வோமா என்று ஆழ யோசித்த வேளையில், பம்பாய் வக்கீல் அவளை பார்க்க வந்தார். 

                                                அகல்யா அவரை கண்டு தேம்பி தேம்பி அழுதாள். அது வரை தனக்கு அழ தெரியுமென்று அவளுக்கே தெரிந்திருக்க வில்லை. சார் !! என்று அவரை நோக்கி கைஎடுத்து கும்பிட்டாள். அவர் , ஒன்றும் கவலை படாதே என்று ஆறுதல் கூறி அவளை கிளம்பச்சொன்னார். அகல்யாவும் மாரு வார்த்தையின்றி கிளம்பினாள். வரும்போது கொண்டு வந்த கற்பு எனும் சீதனத்தை களவுகொடுத்து கனத்த இதயத்துடன் கரைய கரைய கிளம்பினாள். 

                                       பம்பாய் வக்கீல் மனது இளகி மாறி இருந்தார். சீனுவின் தாயார் அவர் வீட்டில் இருக்க, அகல்யா வந்து சேர்ந்தாள். சீனுவின் தாயார் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அகல்யா அவரை கண்டதும்  சமாதானமானாள். அத்தை வாங்க சீக்கிரம் ஊருக்கு போய்விடலாம் என்று அழுதாள். நடந்ததை விவரித்தாள். ஒன்றை தவிர. அந்த கருப்பு சம்பவத்தை அவளால், அவள் உதடுகளால் உரைக்க இயலவில்லை. 

                                               சீனுவின் தாயார் மகனின் நிலை கண்டு வெம்பினார். வக்கீல் மெல்ல பேச்சு கொடுத்தார். அம்மா நீங்க இப்போ ஊருக்கு போனால்  பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும், உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள் . நான் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவுகிறேன் என்றார். சீனுவின் தாயார் ஒரு தீர்மானமாக , ஐயா நீங்க இவங்க ரெண்டு பேரையும் இங்கேயே ஒரு வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளுங்க. நான் ஊருக்கு போயிட்டு கொஞ்சம் பணத்தோட வரேன். நாங்க இங்கேயே இருந்து விடுகிறோம். ஏதாவுது தொழில் செய்து பிழைத்துகொள்கிறோம் என்றார். அவருக்கு ராஜலிங்கத்தின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இத்தனை நாட்கள் பாடுபட்டு வளர்த்து பெற்ற பிள்ளையை இந்த வயதில் காவுகொடுத்துவிடக்கூடாது  என்று முடிவு செய்தார். நாராயணசாமி நண்பர் அவரை தேற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார்.

                                   ராஜலிங்கம் கொதித்தார். அவர் காதிற்கு விஷயம் எட்டிவிட்டது. மாயாண்டி போலீசில் மாட்டிக்கொண்டதால் கையை பிசைந்து கொண்டிருந்தார். ஊர் வந்த சீனுவின் தாயாரை கரிசனத்தோடு பார்க்க வந்தார். தங்கையின் முடிவு தப்பு என்பதையும், விரைவில் அவர்களை அழைத்து வந்து திருமணம் நடத்தி , காணாமல் போன நாராயணசாமி வரும் வரை, தானே எல்லோரையும் காப்பாற்றுவதாக கூறி முதலை கண்ணீர் வடித்தார். அவரின் நோக்கம் இரு குடும்பத்தின் சொத்துகளையும் தானே எப்படியாவது வளைத்து விட வேண்டும் என்பதே.

                                                          நாராயணசாமி காணாமல் போய் விட்டார்  என்பதை சீனுவின் தாயார் நம்பவில்லை.ராஜலிங்கம் அவரை கொலை செய்திருக்க கூடும் என்று கண்டிப்பாக நம்பினார். ஆதலால் , நாராயணசாமியின் வக்கீலிடம் சென்று விசாரிக்க, அவர் உயில் பற்றிய உண்மையை சொல்லி அதை ஊர்ஜிதப்படுத்தினார். ராஜலிங்கம்.

                                           சீனுவின் தாயார் ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் , ஒரு கணிசமான தொகையோடு பம்பாய் வந்து சேர்ந்தார்.


                                                      பம்பாயில் அரிசி வியாபாரம் நடத்த முடியாததால் , அவர்களுக்கு தெரியாத துணி வியாபாரத்தில் ஈடுபட்டார் . இரண்டு மாதங்கள் இப்படியே போக , திடீரென்று ஒரு நாள் அகல்யா குமட்டி குமட்டி வாந்தி எடுத்தாள். டாக்டர் சோதித்ததில் அவள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்தார். வக்கீல், நாராயணசாமியின் நண்பர், சீனுவின் தாயார் எல்லோரும் அதிர்ந்தனர். சீனுவின் தாயார் மெல்ல அகல்யாவிடம், யாரம்மா இதற்கு காரணம் என்று கேட்க , அகல்யா விம்மி விடைத்து ஓவென்று கதறி அழலானாள். நீண்ட நேரம் அழுதபடி யோசித்த அகல்யா , ஒரு தீர்மானமாய் , தீர்க்கமான பார்வையோடு   சீனுவின் தாயாரை நோக்கிவாறே  மெல்ல கூறினாள் 

......ச்...சீ.............சீனு ...............  .என்று  . அதை கேட்ட எல்லோரும் அதிர்ந்தனர்.....

தொடரும் .... 







































                                

Comments