AGALYAAVIN PARISU - 13 அகல்யாவின் பரிசு - 13

அகல்யாவின் பரிசு - 13

                        கூட்டம் குழுமியது. கூடவே கூர்வலியும் கூடியது. சீனு நீலம் பூத்தான். செயலிழந்து மூர்ச்சையானான். அகல்யா அந்த வலியிலும் கண்ணில் பட்டோரிடம் கை கூப்பினாள் , உதவி வேண்டி. 

                        யாரோ ஒருவர் அதட்டினார். அதிகாரத் தொனியில் யாருக்கோ ஏதோ சொல்ல, அகல்யா அப்படியே மயங்கினாள். கண்விழித்த போது அகல்யா ஏதோ ஒரு குடிலில் கிடந்தாள். உடல் முழுதும் வலித்தது. சுற்றும் முற்றும் பார்த்த பின் தான் இருக்கும் இடம் / கடந்த நாளின் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.  மனதோடு பயமும் , திகிலும் பரவியது. சீனுவை அங்கே காணவில்லை. பதறி எழுந்தாள். தூரத்தில் விளையாடிய சிறுமியை அழைத்தாள். அருகில் வந்த அந்த சிறுமி அவளை ஏற இறங்க பார்த்தாள். பின்பு அவளது பாஷையில் (மராத்தி) ஏதோ கேட்டாள்.

                                  அகல்யா விழி பிதுங்கினாள். வீழ்ந்ததோ பாதாளம் விருந்தாளியாய் வேதாளம் என்ற கதையாய் என்ன செய்வதென்றே அவளுக்கு விளங்கவில்லை. சீனு எங்கே என்று சைகையில் கேட்டாள் . சிறுமி வேகமாக ஓடி மறைந்தாள். தன் தாயை அழைத்து வந்தாள். அவர் வந்து அகல்யாவின் கணுக்காலை பார்த்து திருப்தி அடைந்தவளாய், அகல்யாவிற்கு பச்சையாக ஒரு கஷாயம் கொடுத்தாள். அகல்யா அதை தள்ளி வைத்து தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டினாள். அந்த பெண் உடனே அகல்யாவை திட்ட ஆரம்பித்தாள். திட்டுகிறாள் என்பதை தவிர , ஏன் , எதற்கு  என்று அவளுக்கு புரியவில்லை. கஷாயத்தை அவள் அவளின் மூக்கை பிடித்து வாயில் ஊற்றினாள். வயிற்றை புரட்டியது அந்த வாடை. மூக்கை விடுவித்த மறுகணம் அகல்யா தன்னையும் அறியாமல் வாந்தி தொடர்ச்சியாக எடுத்து சோர்ந்து போனாள். 
                                     சிறிது நேரமான பின் , மெதுவாக சீனு , சீனு எங்கே என்று கேட்டாள். அந்த பெண், பக்கத்தில் இருந்த குடிலை கை காட்டினாள். தள்ளாடி எழுந்த அகல்யா அங்கே போக முயற்சிக்க, அவள் கால் பதிக்க முடியாதபடி கணுக்காலை கீறி காயப்படுத்தி இருப்பது தெரிந்தது. அதையும் மீறி அவள் நடக்க, அந்த பெண் உதவி செய்தாள். 

                                        சீனு, உடல் முழுதும்  கருப்பாகி இருந்தது. அகல்யா அதிர்ச்சியில் உறைந்தாள். அந்த பெண்ணை பார்த்து அழுதாள். அந்த பெண் ஆறுதல் கூறி இன்னும் ஒரு வாரம் ஆகும் அவன் கண் விழிக்க என்று கூறினாள். புரியாத பாஷையும் புரிய ஆரம்பித்தது அகல்யாவிற்கு. காலம் எப்படி எல்லாம் பாடம் சொல்லிக்கொடுக்கிறது?. வீழும்போது வீரியம் பெறுவதும், வாழும் போது காரியம் மறப்பதும் காலக்கூத்து அல்லவோ? கண்ணீர்  மல்க அவன் அருகில் அமர்ந்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள் அகல்யா.

                                             இங்கே இருந்து இன்னும் ஒரு வாரம் போக முடியாது. அதற்குள் விரோதிகள் வந்து விட்டால் என்ன செய்வது. முதலில் விரோதிகள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் . பிறகு சீனு குணமாக வேண்டும். அதன் பிறகே அப்பா, ஊர் பிரயாணம் எல்லாம் சாத்தியம் என்பது அவளுக்கு தெளிவாய் தெரிந்தது. அவசரமாக பெண்ணை அழைத்தாள். சைகையில் தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினாள். அந்த பெண் ஆறுதலாக சைகை செய்து அவளுக்கு வேறு உடை கொண்டு வந்தாள். அது லம்பாணி என்ற நாடோடி கும்பலின் உடை . மேலே ஜாக்கெட்டும் கீழே பாவாடை மட்டுமே.. மாராப்பு என்று ஏதும் இல்லை. ஒரு மெல்லிய துணியை தலை மேல் முக்காடு போட்டு கொள்வதே அவர்கள் உடை நாகரீகமாக இருந்தது. அகல்யா தன் உடைகளை அவிழ்த்தாள், அவர்கள் உடையை அணிந்தாள். முற்றுமாய் ஒரு லம்பானியாய் மாறிப்போனாள் தோற்றத்தில்.

                                           அன்று இரவு, ஒரு காமுகன் அந்த குடிலுக்கு வந்தான். லம்பானிகள் ஒழுக்கத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர், ஆயினும் வறுமையும் , இயலாமையும் அவர்களின் புனிதத்தை மேட்டுக்குடியின் ஆளுமைக்கு படையலாக்கியது. வந்தவன்  அகல்யாவின் அழகில் மயங்கினான் . குடிலில் இருந்த பெண் அவனுக்கு, அவள் பாம்பு கடித்து பிழைத்திருப்பதை கூறி, அவளுடன் கூடினால் அவனுக்கும் விஷம் பரவிவிடும் என்று பயமுறுத்தி துரத்தி அனுப்பினாள். வந்தவன் அகல்யாவை உற்று நோக்கிவிட்டு மெல்ல சிரித்தபடியே நகர்ந்து வேறு குடிலுக்கு சென்றான்.

அகல்யாவின் வாழ்வில் இனி ஏற்படப்போகும் பிரளயத்திற்கு அவனே புள்ளி இட்டு ஆரம்பிக்கப்போகிறான் என்று அப்போது அகல்யாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்...

தொடரும் 

.


  








 


Comments