AGALYAAVIN PARISU - 12 அகல்யாவின் பரிசு - 12

 அகல்யாவின் பரிசு - 12

                            தலை கால் தெரியாமல், பின்னங்கால் பிடரியில் பட ஓடுவது என்று நாம் படித்ததுண்டு. அது கண்டிப்பாக சீனுவிற்கு இப்பொழுது பொருந்தும். வித்யாசம் என்னவென்றால்  இங்கே ஓடியது கால்கள் அல்ல, பைக் சக்கரங்கள் . பயமா? சாமர்த்தியமா? எது சீனுவை துரத்தியது என்று தெரியவில்லை. ஆனால் அதுவே சமயத்திற்கு உதவியது. 

வண்டி மும்பை - நாசிக் ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது. இரவு வேளை, நல்ல நிலவொளி, ரம்யமான சூழல்,ஆனால் அதை ரசிக்கவோ, அனுபவிக்கவோ இருவருக்கும் மனதில்லை. அகல்யா அழுது அழுது கண் சிவந்திருந்தாள். தந்தை என்ன பாடு படுகிறாரோ என்று வேதனை அடைந்தாள்.

அகல்யா, நீ ஒண்ணும் கவலைப்படாதே.நாம சீக்கிரமா நம்ம ஊருக்கு போயிடலாம் . அப்பாவை எப்படியாவுது  அவரது நண்பர் அழைத்து வந்து விடுவார்  என்று ஆறுதல் கூறினான். . 

மெதுவாக சற்று பேசியபடியே சென்ற பைக் மீது மோதுவது போலே ஒரு டாடா சுமோ அருகில் வர, சீனுவிற்கு மீண்டும் தன்னை போலீஸ் அல்லது வேறு யாரோ தொடர்கிறார்கள் என்பது புரிந்தது.

மீண்டும் வேகம் எடுத்த சீனு, இம்முறை ஹைவேயில் போகாமல் ஒரு சிறிய குக்கிராமத்திற்கு போகும் பாதையில் பைக்கை ஓட்டினான். இப்போது எந்த வண்டியும்  பின்தொடர முடியாது என்று உணர்ந்த பின்னர் சற்றே பெருமூச்சு விட்டான்.

இரவு வெகு நேரம் ஒட்டிய நிலையில் பைக்  பெட்ரோல் தீர்ந்து போக, சிறிது நடந்து இருவரும் ஒரு மலையடிவார கிராமத்தை அடைந்தனர். பொழுது புலர சிறிது நேரம் இருந்ததால், சற்றே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார். சீனு கை , கால் எங்கும் சிராய்த்து ரத்தம் வந்துகொண்டிருக்க, அகல்யாவிற்கு துக்கத்தால் நெஞ்சில் ரத்தம் சிந்தியது.
ஏதேதோ நினைவுகளுடன் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்தபடியே உறங்கிபோனார்கள். 

ராஜலிங்கத்தின் அடியாள் மிகவும் பதட்டத்தில் இருந்தான். கீழ்வானம் சிவந்து விடியல் வெளிச்சப்பொட்டு வைத்துக்கொண்டிருந்தது. இனி அவர்களை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். கோபத்தில் அந்த நால்வரை ஏசினான். முடிவு, அந்த நால்வரும் அவனை நையப்புடைத்துவிட்டு அவனிடம் இருந்த பணத்தை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அடிபட்ட காயத்தின் வலியின் மிகுதியால் முனகி முனகி கடைசியில் மயங்கிப்போனான்.

நாராயணசாமி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வக்கீல் மூலமாக நபரின் வீட்டில் கண்கலங்க உட்கார்ந்திருந்தார். அவர் நண்பரிடம் அவரின் வக்கீல், " ஐயா, இவரை இங்கே வைத்துக்கொண்டால் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும், ஆதலால் இவரை கொஞ்சம் பணம் செலவு பண்ணி இவர் ஊருக்கே அனுப்பி விடுங்கள், அது தான் நல்லது" என்றார். இது சரியென நண்பருக்கு பட்டாலும் நாராயணசாமி உடன்படவில்லை. என் மகளோடுதான் இங்கே இருந்து போவேன் என்று கூறிக்கொண்டிருக்க, வக்கீல், " இதோ பாருங்க சார் , உங்க மகளையும் , அந்த பையனையும் உங்களோட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு . நான் பாத்துக்கிறேன், நீங்க முதல்ல இங்கே இருந்து போய்டுங்க, இல்லனா உங்க பொண்ண புடிக்க உங்களையே பயன்படுத்தி கொண்டு விடுவார்கள்" என்றார். 

நாராயணசாமிக்கு இதுவும் சரியெனப்படவே , வக்கீல் மேல் நம்பிக்கை வைத்து , கடவுளின் மேல் பாரத்தை போட்டு , தென்காசிக்கு பயணப்பட சித்தமானார்.

பணம் கறக்க ஒரு நல்ல பலியாடு மாட்டிக்கொண்டது என்று வக்கீல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

"அலாந்" என்ற பெயருடைய அந்த சின்ன கிராமத்தின் இளைய சிறுமி வழக்கம் போல் ஆடுகளை அவிழ்த்துவிட்டு அவைகளை மேய்க்க மலை அடிவாரம் பக்கமாய்  ஓட்டிச் சென்றாள். அவளை தொடர்ந்து சுள்ளி பொறுக்கும் ஒரு கும்பல் அரட்டை அடித்தவாறு பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. ஆடுகளை புல் இருக்கும் பக்கம் செலுத்திவிட்டு விளையாட ஆரம்பித்தாள். , சிறிது நேரத்தில் அந்த சிறுமி " ஆ "  வென்று அலறிய சத்தம் அந்த  பிராந்தியத்தையே புரட்டிப்போட்டது. அவளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சுள்ளி பொறுக்கும் கும்பல் , அங்கே கண்ட காட்சியால் பேயறைந்தது போல முழி பிதுங்கி நின்றனர், 

அகல்யாவும் , சீனுவும் வாயில் நுரை தள்ள தள்ள கை கால்கள் இழுத்தபடி துடித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் கருநாகம் ஒன்று படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது..

தொடரும் 

















Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM