AGALYAAVIN PARISU - 9 அகல்யாவின் பரிசு - 9
அகல்யாவின் பரிசு -9
. ராஜலிங்கம் கொதித்தார், குமுறினார், குடித்தார் பின்பு அவரின் நண்பனின் தேற்றலில் அடங்கிப்போனார். அடுத்த முறை கண்டிப்பாக முடித்து விடலாம் என்றே சத்தியம் செய்தான் அவன்.
மைதிலியின் வீடு அழகான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நடுவீட்டில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. இருவர் அமரக்கூடிய அளவு இருக்கைகள் இருந்தன. அதன் எதிரே வாழை கன்றுகள் கட்டப்பட்டு நடுவில் வேங்கடநாதனின் திருஉருவப்படம் வைக்கப்பட்டு அதன் அருகில் சுமார் இருபது தட்டுகளில் வரிசை வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே ஓர் அழகிய மாங்கன்றும் இருந்தது. இடித்த பச்சரிசியில் பிடித்த மாவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருந்தது.
சடங்கு, சம்பிரதாயம் ஆரம்பித்தது. குருக்கள் மந்திரம் சொல்ல மைதிலியின் தாயாரும், தந்தையும் மனையில் அமர்ந்தார்கள். மைதிலி ஸ்வாமி படத்தின் மேல் அட்சதை தூவி, ஸ்வாமியை வலம் வந்தாள். பிறகு ஒரு செம்பில் பசும் பால் எடுத்து தன் தாய்க்கும்,தந்தைக்கும் பாத பூஜை செய்தாள். அவர்களை தொடர்ந்து நாராயணசாமிக்கும் இன்னும் பிற உறவின் முறைகளுக்கும் செய்துமுடித்தாள். பிறகு நடு வீட்டில் ஸ்வாமியின் முன்பு மண்டியிட எல்லோரும் அவளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். நாராயணசாமி அவளுக்கு ஒரு அட்டிகை பரிசாக கொடுத்தார். அவர்கள் வழக்கப்படி சடங்கின் கடைசி பகுதியாக, பூஜையிலிட்ட மாங்கன்றை மூத்தவர்கள் எடுத்து கொடுக்க, மைதிலி அதை வீட்டின் பின்புறத்தில் நட்டு வைத்தாள். மனையில் பிறந்த மஹாலக்ஷ்மி புகுந்தவீட்டிற்கு போகும் முன்பு, தனது செழுமை, வளமை எல்லாம் தனது வீட்டிலும் தழைக்க வேண்டும் என்ற ஓர் கோட்பாடோடு ஏற்பட்ட ஓர் சடங்கு இது. மைதிலியின் வீட்டில் அவளின் பாட்டி நட்டு வைத்து பெரிய மரமாக பூத்து செழித்து காய்த்து கனி கொடுக்கும் மாமரம் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு நாளை அங்கே படையல் போட்டு கும்பிடுவது அவர்களின் வழக்கம்.
மாலை 7 மணி. மைதிலியின் தாயார் , நாராயணசாமி, மைதிலி, மற்றும் சில உறவினர்கள் எல்லோரும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். மைதிலியின் தாயார் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்த சந்தோஷத்திலும், நடக்க இருக்கும் திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பிலும், ஒருவிதமான சந்தோஷமும் பரவசமும் கலந்த நிலையில் இருந்தார். மருதாணி அரைக்கப்ட்டு மைதிலியின் தாயாரிடம் வேலையாள் கொடுத்து சென்றான். பெண்கள் எல்லோரும் மருதாணி வைக்க தொடங்கியபோது அகல்யா அங்கிருக்கவில்லை. அந்நேரம் சீனு வந்து சேர்த்தான். அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தவன், மைதிலி அழைக்க அவளிடம் சென்றான்.
டேய் சீனு, எனக்கு கொஞ்சம் மருதாணி வச்சு விடறியா என்று கேட்டாள். எதுக்கு இப்படி கஷ்டப்படணும் நான் வேணும்னா மருதாணி வைக்கிற பர்வீன் அக்காவை கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா என்றான். வேண்டாம், வேண்டாம் கல்யாணத்திற்கு அந்த மாதிரி கை பூரா வச்சுக்க எனக்கு பிடிக்கல. உள்ளங்கைளயும், விரல்களுக்கும் வெச்சாலே போதும் எனக்கு என்றாள். சரிப்பா, உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே செய் என்றபடி அவளுக்கு மருதாணி இடத்தொடங்கினான். மைதிலியின் தாயார் சீனுவிற்கு காபி கொடுத்து விட்டு என்னலே ஜோலி முடிச்சு வாரியாக்கும், ரவைக்கு சாப்பிட்டு தான் போகணும், நேத்து மாதிரி ஓடிடாதே என்றார். மைதிலியும் , சீனுவும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒரு சகோதர பாசம் அவர்களுக்குள் நிலவியது. எல்லோரும் மருதாணி வைத்து கொண்டு விட, சீனு நாராயணசாமியிடம் சென்று ஐயா உங்களுக்கு வச்சு விடட்டுமா என்று அவரை வம்புக்கு இழுத்தான். அப்போது அகல்யா அங்கு வர, மைதிலி சீனுவிடம், சீனு அகல்யாவிற்கு கொஞ்சம் வச்சு விடு என்றாள். அகல்யா சற்றே கலவரப்பட்டு வேண்டாம் மைதிலி நானே வச்சுக்கறேனே என்றாள். சீனு அவளிடம் மருதாணியை கொடுக்க, அவள் அருகில் வந்து அவளை விழியோடு விழி வைத்து பார்வையை கலக்கவிட, அவனின் ஆழமான பார்வையில் அகல்யாவின் இதயம் சலனப்பட தொடங்கியது. எப்படிடி நீயே வச்சுக்குவே, சும்மா பிடிவாதம் பிடிக்காம வச்சுக்கோ என்றாள். நாராயணசாமியும் ஆமோதிக்க சரி என்றாள் அகல்யா.
சீனு எந்தவிதமான விகல்பமும் இல்லாமல் அவள் கையை பற்றினான். அகல்யாவிற்கு கைகள், மற்றும் கால்களில் புல்லரித்தது. அப்பாவின் முன்பே எப்படி இவனால் என் கையை தைரியமாக பிடிக்க முடிந்தது. இவன் உண்மையிலே ,மிகவும் நல்லவனா இருக்க வேண்டும், இல்லை என்றால் அப்பா எப்படி ஆமோதிப்பார். என்னவெல்லாமோ யோசனை. அகல்யாவிற்கு முதலில் உடம்பு நடுங்கியது, பிறகு அவன் கால்களை இழுத்து மருதாணியை வைத்தபோது ஏதோ அவளுக்கு அவன் மெட்டி போடுவது போன்ற பிரம்மை ஏற்பட்டு உடல் கூசினாலும் உள்ளம் எதற்கோ குதூகலித்தது. .
அவன் கால்களில் மருதம் வைக்க, அகல்யாவின் கைய் சிவக்கும் முன்பே அவளின் உடல் மெல்ல மெல்ல வெட்கத்தில் சிவக்க தொடங்கியது. காதல் அரும்பியது.
தொடரும்....
Comments
Post a Comment