AGALYAAVIN PARISU - 8 அகல்யாவின் பரிசு - 8

அகல்யாவின் பரிசு - 8

                           அகல்யாவும், மைதிலியும், மற்றும் இதர பெண்களும் காலையிலேயே குளித்து, நல்ல உடை உடுத்தி மங்களகரமாக உலா வந்த வண்ணம் வேலைகளை செய்துகொண்டு இருந்தார்கள். பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அந்த வீடு. 

மைதிலி தன் பால்ய நினைவுகளில் மூழ்கி இருந்தாள். தந்தையோடு முதன் முதல் பள்ளிக்கு சென்றது முதல் அவரோடு  கழித்த அத்தனை நிகழ்வுகளும் மனதில் நிழலாட, அதில் நெகிழ்ந்து போன அவள் அவளையும் அறியாமல் மெல்ல கண்கசிந்தாள். எத்தனை அன்பான அப்பா. எவ்வளவு பாசத்தோடு நம்மை வளர்த்தார். இவரை பிரிந்து எப்படி நாம் வேறு ஒருவர் வீட்டில் வாழப்போகிறோம். எனக்கு மட்டும் தான் இந்த பாரமா? அல்லது அவருக்கும் இதே  போல் இருக்குமா? அவர் வாழ்வில் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததே இல்லையே. எப்படி அவரால் முடிகிறது. என்னை வழிஅனுப்புவதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷமா? மகளின் பிரிவைகூட மறக்கடித்து விடும் அளவு மகளின் திருமணமென்பது பெற்றோர்க்கு அத்தனை மகிழ்வளிக்கும் நிகழ்ச்சியா? என்னென்னவோ நினைவுகளில் இருந்த அவளை அகல்யா உலுப்பினாள்.  ஏண்டி கண் கலங்குறே என்றாள். மைதிலியின் மனவோட்டத்தை புரிந்து கொண்டு, பெண்ணாக பிறந்தால் இந்த ஒரு காலகட்டத்தை தாண்டியே ஆகவேண்டும் , ஆகையால் மனச இப்போ சமாதான படுத்திக்கொண்டு சந்தோஷமா இரு. உன் கணவரோடு நிதானமாக கல்யாணத்திற்கு பிறகு கவலைப்பட்டுக்கொள்ளலாம் என்று கூறிய பொழுது அந்த செய்தி வந்தது.

அகல்யாவின் தந்தை ஊருக்கு வரும் வழியில் விபத்து ஏற்பட்டு  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அது.  சேதி சொல்ல வந்த  ஸ்ரீநிவாசன், ஒன்றும் பயப்படத்தேவையில்லை என்றும்  ஆறுதல் கூறினான்.
வண்டி ஓர் வளைவில் திரும்பியபோது நாராயணசாமியின் குதிகால் சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து அடிபட்டதாக கூறினான்.

அகல்யா மெல்ல விசும்ப ஆரம்பித்தாள். மைதிலியின் தாயார் அகல்யாவை தோளில் தட்டி கொடுத்து, அழாதேம்மா வா நாம் உடனே ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று கூறினாள்.


அவர்கள் புறப்பட்டு போக, ஸ்ரீனிவாசனும் அவன் தாயும் இருசக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.

நாராயணசாமி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து தனக்கு நடக்க முடிகிறதா என்று கட்டுப்போட்ட கால்களை அழுத்தி நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது அகல்யா வந்து சேர்ந்தாள். அப்பா என்றபடி அழுதுகொண்டே அவர் அருகில் சென்று அவர் கால்களை தொட்டு பார்த்தாள்.

பயப்படாதே அம்மா!!, எனக்கு ஒன்னும் இல்லை. குதிகால் சற்று அடிபட்டு விட்டது. ஆனாலும் முன்னங்கால்களால் நடக்க முடிகிறது. பயப்படாதே என்றார்.

அப்போது ஸ்ரீனிவாசனும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தனர்.

தங்கச்சி, ஒன்  பையன் எனக்கு இப்படி ஆனா ஒடனே என்னமா துடிச்சிபோயிட்டான்  தெரியுமா. நல்லாவே என்னை பாத்துக்கிட்டான் என்றவர், அகல்யாவிடம் திரும்பி, அம்மா இந்த தம்பிதான் என்ன ஆஸ்பத்திரியில சேர்த்து கவனிச்சது என்று ஸ்ரீனிவாசனை காட்டினார். அகல்யா முதன்முறை அவனை பார்த்து ரொம்ப நன்றீங்க என்றாள். டாக்டர் எப்போ போகலாம் என்று கூறினார், எதுவும் பயப்பட தேவையில்லையே? எவ்ளோ நாள் ஆகும் குணமாக? என்று ஸ்ரீனிவாசனிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டாள்.

ஸ்ரீநிவாசன் அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு,  மெதுவாக சொன்னான், கார் வரச்சொல்லி இருக்கேன், வந்தவுடன் வீட்டுக்கு போகலாம், ஒன்னும் பயப்படவேண்டாம் என்றான்.

வீட்டுக்கு போகலாம் என்று கேட்டவுடன் அகல்யா தன் கேள்விகளுக்கு பதிலை எதிர்பாராமல் அப்பா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, இனிமே நான் உங்கள தனியாவே விடமாட்டேன் என்று கூறியவாறே அவர் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட கார் வந்து சேர்ந்தது.

நாராயணசாமி அவளை தேற்றியவாறே , சீனு இந்தாப்பா இந்த பணத்தை வச்சிக்கோ, ஆஸ்பத்திரி செலவுக்கு என்று ஒரு தொகையை கொடுத்தார். அய்யா, எல்லாம் கட்டிட்டேன் நீங்க வாங்க அதை அப்புறம் வாங்கிக்கிறேன், என்று அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்றான். அகல்யா சற்றே ஆச்சரியப்பட்டாள். எல்லாவற்றிற்கும் தன்னையே அழைக்கும் அப்பா இன்று தன்னை எதிர்பாராமல் அவனோடு செல்கிறாரே  என்று.

சீனு தான் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு நாராயணசாமி, அகல்யா,  மைதிலியின் தாய் மற்றும் தன் தாயை காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தான். மறுநாள் வருவதாக அவன் தாயிடம் கூறினான்.

வீடு வந்து சேரும் வரை நாராயணசாமி ஸ்ரீநிவாசனின் புகழ் பாடிய வண்ணமே இருந்தது அகல்யாவுக்கு வியப்பு. காரணம் அவர் யாரையும் இப்படி பாராட்டி அவள் பார்த்ததில்லை.

நாராயணசாமி ஸ்ரீனிவாசனின் அம்மாவை பார்த்து " உன்னை பாத்துக்க இனிமே உன் பிள்ளை இருக்கான்மா, இனிமே உனக்கு ஒரு கவலையும் இல்லை. நல்ல பையன். என்னையே இந்த அளவு பாத்துக்கிட்டான்னா, உன்னை கை மேல வச்சு தாங்குவான். நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்  என்றவாறே  அவர் முகத்தை பார்த்தவர் திடுக்கிட்டார். ஏம்மா அழுவுறே, என்ன ஆச்சு என்றார்.

இல்லிங்க, அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாத்துட்டேன்னா அப்புறம் நான் நிம்மதியா போய்சேர்ந்துருவேன், அதையும் நீங்க தான் எனக்கு கூடவே இருந்து முடிச்சு தரணும் என்றார் ஸ்ரீனிவாசனின் அம்மா. எல்லாம் நல்ல படியா   நடத்திடலாம்மா, கண்ண தொடச்சிக்கோ என்றார். அகல்யா இவர்கள் சம்பாஷணையை கேட்டபடியே தனக்குள் நினைத்துக்கொண்டாள், தாயில்லாமல் இருப்பது ஒரு குறை என்றால், தந்தை இல்லாமல் இருப்பது பெருங்குறை போல  என்று..

கார் வீட்டை அடைந்தது. அதே நேரம்..
ராஜலிங்கத்தின் ஆட்கள் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

தொடரும்..............












Comments