AGALYAAVIN PARISU - 5 - அகல்யாவின் பரிசு - 5

 அகல்யாவின் பரிசு - 5


                                  கல்யாவிற்கு மனசு பொறுக்கவில்லை. ஏன் என்னுடைய வாழ்க்கை இப்படி அலை கழிக்கப்படுகிறது? என்ன பாவம் செய்தேன். பெற்ற மகனை அருகில் பார்த்தும் அவனை  கொஞ்சவோ, ஆரத்தழுவிக்கொள்ளவோ முடியாமல் போனதே. ஒன்றாக வாழத்தான் கொடுப்பினையில்லை , எப்போதோ ஒரு நேரம் கொஞ்சத்தான் சந்தர்ப்பம் இல்லாமல் இறைவன் ஏன் வஞ்சித்தான்? நெஞ்சம் விம்மி வெடித்தது. கிருஷ்ணா எவ்வளவு வளர்ந்துவிட்டான் , எவ்வளவு அழகாய் இருக்கிறான். அவன் முகத்தில் சந்தோஷமும் செழுமையும் மின்னுவதை அவள் காண தவறவில்லை. கோகுலிடம் அவன் சிறப்பாக வளர்வது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. இதை பார்க்கும் பாக்கியமாவது இறைவன் தனக்கு அருளியதை நினைத்து அந்த தென்காசி விஸ்வநாதருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக்கொண்டாள். அழுவது என்பதே அறியாமல் வளர்ந்த தான் , இப்போது தன்னையும் அறியாமல் தாரை தாரையாக கண்ணீர் சிந்துவதை கண்டு தன்  நிலைமை இப்படியாகிவிட்டதே என்று மேலும் கண்ணீர் விட ஆரம்பித்தாள். பொங்கி வரும் அழுகையை அவளால் கட்டுப்படுத்தமுடியவேயில்லை. பேருந்தில் உள்ள சிலர் அவளை பரிதாபமாக பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. ஆயினும் கிருஷ்ணாவை நினைத்த மாத்திரம் அவளுக்கு அவள் வேதனையின் வெளிப்பாடு கண்ணீராய் வடிந்துகொண்டிருந்தது.

என்ன ஒரு வாழ்க்கை இது. இப்படி நாம் வாழ்ந்து தான் ஆகவேண்டுமா? இவ்வாறு வாழ்க்கை தடம்புரண்டுபோக யார் காரணம். நானா? அப்பாவா? கோகுலா? ஸ்ரீனிவாசா ? ராஜலிங்கமா ? கிருஷ்ணாவா? யாரை குறை கூறியும் பயனில்லை. சேதாரமானது தன்னுடைய வாழ்வே அல்லவா? ஆதலால் எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பு, தானே காரணம் என்று எண்ணிக்கொண்டாள். எல்லோரையும் விட தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தை நினைத்தபோது தன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். தன்னுடைய இளம்பிராயத்து நிகழ்வுகள் அவள் மனக்கண்ணில் விரியத்துவங்கின...


வணிகர் கூட்டமைப்பு சங்க தலைவர் நாராயணசாமி தென்காசியில் மிகவும் செல்வாக்குள்ள மனிதர். நேர்மையானவர். யாருக்கும் தீங்கு நினையாது தன்னால் முடிந்த நன்மைகளை செய்து நற்பெயர் சம்பாதித்து  வைத்திருந்தார் . அவருக்கு மனைவி இல்லை . ஒரே ஒரு மகள் மட்டுமே . பெயர் அகல்யா. தன் கண்மணிக்கு மேலாக அகல்யாவை பாதுகாத்து உயிரையே வைத்து வளர்த்து வந்தார். மகள் மேல் உள்ள பாசத்தால் அவர் மருமணம் பற்றி யோசிக்கவேயில்லை. அவருக்கு உற்றார் உறவினர் அதிகமாதலால் அகல்யாவை குறை தெரியாது வளர்த்து வந்தார்.

அப்படி அவர்கள் வாழ்ந்துவந்த வேளையில் , ஒரு நாள் அவரது உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழா வந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே போக ஆயத்தம் செய்து கொண்டு புறப்பட தயாராக இருக்கையில், வணிகர் சங்க பிரச்சினை ஒன்று அவரை போக விடாமல் தடுத்தது. அவர், அகல்யாவை தன் ஒன்று விட்ட தங்கை குடும்பத்தாருடன் அனுப்பிவிட்டு தான் பிறகு செல்வது என்று முடிவு செய்தார்.

அதன்படியே அகல்யாவும் புறப்பட்டாள். தன்  வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகும் அந்த நபரை சந்திக்கப்போகிறோம் என்பதை அறியாமல் ஆனந்தமாய் புறப்பட்டாள் .......

தொடரும்.....







Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM