மழையோடு ஓர் உரையாடல்.
மழையோடு ஓர் உரையாடல்.
உறக்கம் கலைந்தது!
அதிகாலை 4 மணி.!!
அத்துணை உயிர்களும் ஆழ்நித்திரையில்!!
சடசடவென ஓர் சத்தம்!!!
கதவுகளின் இதய துடிப்போ அது!
யாரின் அழைப்பு இது!!
கதவைத்திறந்தேன் அல்ல கனவுகள் திறந்தேன்!!
வெளியில் மழையோ மழை.
அழைத்தாயோ மழையே!! என்றேன்
"கொட்டி நான் தீரும்முன்பே - கண்
கொட்டாமல் உரையாடிவிடு என்னே!!"
ஏற்கப்பட்டது மழையின் அழைப்பு.
*************************************
எங்கள் உயிரே! என் உற்சாகமே!
ஜீவ நதியே! நதியின் மூலமே!!
எங்கிருந்து வருகிறாய் என்றே ஏகினேன்
உலகெலாம் உணர்ந்தவன்! ஓதற்கு அரியவன் !!
தலைபிறந்து வருகிறேன், வளம்போற்ற வருகிறேன்!
எங்கனம் நீர் பிறந்ததென சொல்வாயோ மென்மழையே!
அணுவுக்குள் உலகம் உண்டு !! கல்லுக்குள் ஈரமும் உண்டு
இருளுக்குள் ஓளியும் உண்டு! ஈசப்பிழம்புள் அனைத்தும் உண்டு.
உனக்கும் ஆயுள் உண்டோ !! மீண்டும் சிவனடி சேர்வதுண்டோ
ஆம் கண்ணே உண்டு என்றது மாமழை.
வீழ்கின்ற நிலத்தின்பால் என் வாழ்காலம்.
சிப்பியில் வீழ்ந்தால் முத்து
சிகரத்தில் வீழ்ந்தால் பனி
ஆழியில் வீழ்ந்தால் அலை- அரும்
மண்ணிலென்றால் அனைத்திற்கும் உயிர்.
முத்தாகிப்போனால் சில தலைமுறை
பனியாகினால் ஒரு யுகம்வரை
அலையாகினால் நீராவியாகும்வரை
உயிரின் நாடியானால் அதன் ஆன்மகாலம் வரை.
ஆம் கண்ணே எமக்கும் பிறவிகள் உண்டு
வீழ்கின்ற நிலத்தின்பால்அமையும் என் வாழ்காலம்.
கண்ணே என்றழைக்கும் கலைமழையே!! உன்னை நான் எங்கனம் அழைப்பேன்
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
என்று வைரமுத்து போல் காதலிப்பேனோ?!
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
என்று கவியரசு போல் ஆராதிப்பேனோ ?!
நீர் இன்று அமையாது உலகெனின் வான்இன்று அமையாது ஒழுக்கு
என்று வள்ளுவன் போல் வணங்குவேனோ ?
ஹோவென்றதொரு பெருமழை வீழ, என்னவென்றேன் ,
நான் சிரித்தேன் என்றது மழை.
உன்னை எனக்கு முக்கோடி ஆண்டுகள் தெரியும் அது உனக்கு தெரியுமா என்றது மழை.
நான் பிறந்து இப்போதுதான் 50 ஆண்டுகள் ஆகிறது, முக்கோடி ஆண்டுகள் எப்படி
நீயும் நானும் ஒரே நேரத்தில் உருவான ஆற்றல்கள். நான்
மழை, நீ ஆன்மா, மற்றும் காற்று, நிழல், நாற்றமென
(வாசனை) இன்னும் எத்தனையோ ஆற்றல்கள். முக்கோடி
ஆண்டுகளில் இது உனக்கு முன்னூற்றை தாண்டிய பிறவி,
இன்னும் மோட்சம் அடைய முடியாத பிறவி.
நானும் நீயும் ஆற்றலெனில் உன்னில் ஆண் பெண் பாலினம் உண்டோ.
உண்டு கண்ணே உண்டு!!
தழுவும்போது நான் பெண்
தாகம் தீர்க்கும்போது நான் பெண்
தறிகெட்டு ஓடும்போது ஆண்
தாய்மை தரும் அணுவில் நான் ஆண்
சிவனும் சக்தியும் ஒருமேனி, ஒவ்வொரு பாகமும் ஒரு பாதி
எந்தப்பக்கம் ஆற்றல் வெளிப்படுகிறதோ அதற்கேற்பவே ஆணாகும், பெண்ணுமாகும்.
மழையே !! மழையே உன்னை என்னவென்று சொல்ல
நாதம் இசைப்பதால் உன்னை நாதவெள்ளம் என்றாரா
கானம் இசைப்பதால் உன்னை கானமழை என்றாரா
ஞானம் ஊற்றெடுத்தால் ஞானப்பெருக்கு என்றாரா
நல்லோழுக்கம் தருவதால் நற்றமிழ்தம் என்றாரா
கொட்டித்தீர்த்துவிட பணித்தாரா
நீ கொள்ளை அழகுக் குளிர் தாரா
மீண்டும் கதைக்க வருவாரா - என்
மச்சமில்லாத நயன் தாரா..
************************************************************************
ஐயோ ஜன்னலை தெறந்து வச்சுட்டு என்ன பண்றீங்க. பாருங்க போர்வை தலையணையெல்லாம் ஈரம் ஆயிடுச்சு. அப்படி என்னததான் இருட்டில பார்ததிட்டிருக்காரோ, பைத்தியக்கார மனுஷன் என்று ..... பேசிக்கொண்டே வந்த என் மனைவி ஜன்னலை மூட, மழையோடு புன்னைகைத்து விடைபெற்றேன். கொட்டி தீர்ந்த மழை மீண்டும் எப்போது வருமோ எனும் ஆவலை மனதுள் கொட்டி தீர்த்திருந்தது.
மீண்டும் வந்த மாமழையே!! மேலும் சில கேள்விகள்.
எல்லோரும் ஒரே ஆற்றலில் பிறந்தவர் எனின் ஏற்றத்தாழ்வுகள் எதற்காக.
மழை சிரித்தது.
ஏற்றத்தில் இருந்தாலும் பள்ளத்தை நோக்கிய பயணம் என்னுடையது.
பள்ளத்தில் இருந்தாலும் சிகரத்தை எண்ணி ஏங்குவது உன்னுடையது.
ஏற்றத்தாழ்வுகள் எனக்கில்லை.
இல்லாத ஆசைகளே உனக்கில்லை.
உள்ளத்தில் உள்ளதுதான் உலகம் - கண்ணா,
இதை உணராமல் உழலுவார் இவ்வான்மாக்கள் -- கண்ணா.
மழையே!
மென்மழையே!
மென்மழையாவதால் தண்ணீர்
கண்மழையாவதால் கண்ணீர்
பனிமழையாவதால் பன்னீர் எனில்
ஆழிப்பேரலையும், அகோர தாண்டவமும் ஏன்.
என் கடன் பனி செய்து கிடப்பதே
முதர்கோடி வருடங்கள் உலகில் அனைத்தும் உயிர்ப்பித்தேன்
மறு கோடி ஆண்டுகளில் ஆக்கவும், அழிக்கவும் செய்தேன்.
இணைத்ததை பிரித்தேன்
பிரிந்ததை இணைத்தேன்
கண்டங்கள் உருவானது.
எமக்கு இடப்பட்ட கட்டளை.
ஆக்கிஅழித்து, அழித்தாக்குவது
இனி வரும் யுகத்தில் அனைத்தையும் அழிப்பேன் .
அடுத்த ஆயிரம் கோடி ஆண்டுகளில்
ஆன்மாக்கள் நீருக்குள் வாசம் செய்யும்.
உன்னை அங்கேயும் சந்திப்பேன்.
ஐயஹோ!! எனக்கு மோட்சமே இல்லையா வான் மழையே !
இன்னும் கோடியாண்டுகள் இப்படியே உழல்வதோ!
வினைதீர வழியொன்று சொல்வாயோ மழையே
Comments
Post a Comment